பிரேசில் நாட்டில் திருத்தந்தை
28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 22, இத்திங்களன்று, பிரேசில் நாட்டு உள்ளூர் நேரம் மாலை 4 மணியளவில் (இந்திய நேரம் நள்ளிரவு 12.30 மணி) ரியோ தெ ஜனெய்ரோ சென்றடைந்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முதல் மேய்ப்புப்பணி பயணம் இது. பிரேசில் நாட்டு அரசுத்தலைவர் Dilma Rousseff அவர்கள், ‘Guanabara அரண்மனை’ என்றழைக்கப்படும் அரசு மாளிகையில் வரவேற்பு வழங்கினார். அப்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய உரை:
தன் அன்பான பராமரிப்பில், எனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இலத்தீன் அமெரிக்காவில் மேற்கொள்ள, இறைவன் விரும்பியுள்ளார். அதிலும் சிறப்பாக, நம்பிக்கையையும், திருப்பீடத்துடன் ஆழ்ந்த நட்பையும், பகிர்வதில் பெருமிதம் அடையும் பிரேசில் நாட்டுக்கு என்னை இறைவன் அழைத்து வந்தது அவரது தெய்வீக நன்மைத்தனமே. பிரேசில் நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ள சிறந்த வழி, அவர்களின் இதயங்கள் வழியே என்பதை நான் கற்றுக்கொண்டேன். எனவே உங்கள் இதயக் கதவுகளை மென்மையாகத் தட்டுகிறேன். இந்த ஒரு வாரம் உங்களுடன் தங்க எனக்கு அனுமதி தாருங்கள். என்னிடம் தங்கமோ, வெள்ளியோ இல்லை, ஆனால் மிக அரியக் கருவூலமான இயேசு கிறிஸ்துவை நான் கொணர்ந்துள்ளேன். அவர் பெயரால் நான் வந்திருக்கிறேன். கிறிஸ்துவின் அமைதி உங்களோடு இருப்பதாக! அரசுத்தலைவரையும், அவரது அரசின் மதிப்புமிகு உறுப்பினர்களையும் அன்புடன் வாழ்த்துகிறேன். அரசுத்தலைவர் அவர்கள் வழங்கிய வரவேற்பிற்கு மிக்க நன்றி. இந்த மாநிலத்தின் ஆளுநர், இந்நகரின் மேயர், மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள், இன்னும் இந்தப் பயணம் நல்ல முறையில் நடைபெற முயற்சிகள் மேற்கொண்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் வாழ்த்துகிறேன்.
பிரேசில் மக்களை வழிநடத்தும் என் சகோதர ஆயர்களையும், தலத்திருஅவை உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். உலகின் பல இடங்களிலும் வாழ்வோர் கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதே உரோமையின் ஆயருக்குரிய முக்கியப் பணி என்பதால், அதனை நிறைவேற்றவே இங்கு வந்துள்ளேன்.
பிரேசில் நாட்டின் எல்லைகளைக் கடந்த ஒரு கருத்துக்காக நான் இங்கு வந்திருக்கிறேன். உலக இளையோர் நாளுக்கென நான் வந்துள்ளேன். கரங்களை விரித்துக் காத்திருக்கும் மீட்பர் கிறிஸ்துவினால் ஈர்க்கப்பட்டு, உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள இளையோரைச் சந்திக்க நான் வந்துள்ளேன். மீட்பராம் கிறிஸ்து, தன் விரிந்த கரங்களால் தரும் அணைப்பினில் தஞ்சம் அடையவும், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்று அவர் தரும் அழைப்பினை இன்னும் தெளிவாகக் கேட்கவும் இளையோர் விரும்புகின்றனர். உலகின் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் வந்துள்ள இவ்விளையோர், பல்வேறு மொழி பேசுபவர்கள், பல்வேறு கலாச்சாரங்களைக் கொணர்பவர்கள். இருப்பினும், தங்கள் உள்ளத்தின் வேட்கைகளுக்கு கிறிஸ்துவே உண்மையான பதில் என்பதை உணர்ந்தவர்கள். இந்த வேட்கையே, அவர்களிடையே காணப்படும் பல வேறுபாடுகள் மத்தியிலும் அவர்களை ஒன்றாகப் பிணைக்கிறது.
கிறிஸ்துவின் நட்பை அனுபவத்தில் உணர்ந்துள்ள இவ்விளையோர், தங்கள் உள்ளத்திலிருந்து வரும் சக்திக்கு முன் எந்த ஒரு சக்தியும் பெரிதல்ல என்பதையும் அறிந்தவர்கள். எனவே, கிறிஸ்து அவர்களுக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார். "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற தன் பணியின் எதிர்காலத்தை கிறிஸ்து இளையோரிடையே நம்பிக்கையுடன் அளித்துள்ளார். மனிதர்கள் உருவாக்கும் எல்லைகளைக் கடந்து, பாசம் மிகுந்த உடன்பிறப்புக்களால் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கச் செல்லுங்கள் என்று கிறிஸ்து இவர்களைப் பணிக்கிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இளையோரும் இச்சவாலை ஏற்றுக் கொள்கின்றனர். தங்களிடம் உள்ள ஒரே ஒரு வாழ்வை இந்தச் சவாலுக்கு உரிய பதிலாக அளிக்க அவர்கள் தயங்குவதில்லை. ஏனெனில், கிறிஸ்து தங்களை ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. பிரேசில் நாட்டுப் பயணத்தில், இளையோரிடம் நான் பேசும்போது, அவர்களின் குடும்பங்களில் இருப்போரிடமும், அவர்கள் வாழும் தலத்திருஅவை குடும்பத்துடனும் நான் பேசுகிறேன் என்பதை நன்கு உணர்ந்துள்ளேன். இவர்கள் உருவாக்கும் மனித குடும்பத்திடமும், எதிகாலத் தலைமுறையினரிடமும் நான் பேசுகிறேன் என்பதை அறிவேன். "எங்கள் குழந்தைகளே எங்கள் கண்ணின் கருவிழிகள்" என்று பிரேசில் நாட்டில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பற்றி பொதுவாகக் கூறுவர். பார்வை என்ற மேலான கொடையை நாம் பெறுவதற்கு சன்னல்களாக உள்ளவை நமது கண்களே. இளையோரை கண்களுடன் ஒப்புமைப்படுத்தி இவ்விதம் கூறுவது மிக அழகான ஓர் எண்ணம். இது நமது சிந்தனையைத் தூண்டும் கேள்விகளையும் எழுப்புகிறது. நமது கண்களைத் தகுந்த முறையில் பாதுகாக்கவில்லையெனில் என்ன ஆகும்? எவ்விதம் நம்மால் முன் செல்ல முடியும்? இந்த வாரம் இக்கேள்விகளை நாம் எழுப்புவது நல்லது. இவ்வுலகினுள் எதிர்காலம் நுழைவதற்கு இளையோரே சன்னல்கள். இந்த உண்மை நமக்கு முன் சவால்களை வைக்கின்றது. இளையோரின் உடல், மனம், ஆன்மா என்ற அனைத்து அம்சங்களிலும் அவர்கள் அடையக்கூடிய முழு வளர்ச்சிக்கு நாம் பாதுகாப்பானச் சூழலை உருவாக்குகிறோமா? நீடித்த நலம் தரும் உண்மைகளயும், நன்னெறி விழுமியங்களையும் அவர்கள் பெறுவதற்கு நாம் என்ன முயற்சிகள் எடுக்கிறோம்? மனித உயிர்கள் வாழ்வதற்கு இவ்வுலகம் இன்னும் தகுதியான இடமே என்ற நம்பிக்கையை அடுத்தத் தலைமுறைக்கு நாம் எவ்விதம் அளிக்கிறோம்? இளையோர் தங்கள் எதிர்காலத்தையும், மனித குடும்பத்தின் நலனையும் உருவாக்கும் சிற்பிகள் என்ற உண்மையை அவர்கள் உணர்வதற்கு நாம் எவ்வகையில் உதவுகிறோம்? இச்சவால்களுக்குத் தகுந்த பதில்களை நம்மால் தரமுடிந்தால், நல்லதொரு எதிர்காலம் இளையோர் வழியாக இவ்வுலகில் நுழைய நாம் வழிவகுப்போம். இறுதியாக நான் உங்களிடம் கேட்பது இதுவே: ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டு, அவர்களுடன் நட்புறவுடன் உரையாடலை வளர்க்க முயற்சி எடுங்கள். மனிதம், கலாச்சாரம், மதம் என்ற பல தளங்களிலும் பன்முகம் கொண்ட பிரேசில் மக்கள் அனைவரையும் அணைப்பதற்கு, திருத்தந்தையின் கரங்கள் விரிந்துள்ளன. அமேசான் பள்ளத்தாக்கு, வறட்சி மிகுந்த Pantanal பகுதி, நகர்புறம், கிராமம் என்று பிரேசில் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ளோரையும் அணைப்பதற்கு திருத்தந்தையின் கரங்கள் நீண்டுள்ளன. திருத்தந்தையின் அன்பிலிருந்து யாரும் தள்ளிவைக்கப்படப் போவதில்லை. இன்னும் இரு நாட்களில், Aparecida அன்னை மரியிடம் உங்கள் அனைவரையும், உங்கள் குடும்பங்களையும் காணிக்கையாக்கி நினைவு கூருவேன். தற்போதைக்கு உங்கள் அனைவருக்கும் என் ஆசீரை வழங்குகிறேன். உங்கள் வரவேற்பிற்கு என் நன்றி!